தேசிய அளவிலான மாதிரி நீதிமன்றம்

Mar 22, 2023 - 09:56
Mar 22, 2023 - 09:58
 11

சேலம் சென்டரல் சட்டக்கல்லூரியில் பேராசிரியர் ஆர்.வி.தனபாலன் -தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி-2023 சேலம் சென்டரல் சட்டக்கல்லூரியில் பேராசிரியர் ஆர்.வி.தனபாலன் - தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டிக்கான தொடக்க விழா கல்லூரியின் விழா அரங்கத்தில் நடைபெற்றது.விழாவில் கல்லூரியின் தலைவர் த.சரவணன் அவர்களால் விளக்கேற்றி துவக்கி வைத்தார்.இப்போட்டிகள். இந்த தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு மாநிலங்களை சார்ந்த 28 சட்டக்கல்லூரி மாணவ குழுக்கள் கலந்துகொண்டன. இப்போட்டிகளின் நடுவர்களாக பல்வேறு கல்லூரிகளை சார்ந்த பேராசிரியர்களும், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களும்,பார் கவுன்சில் உறுப்பினர்களும் அரசு வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். இவ்விழாவில் கல்லூரியின் உதவிப் பேராசிரியை சாந்தகுமாரி வரவேற்புரை ஆற்றினார்.அதனை தொடர்ந்து கல்லூரியின் தலைவரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலின் துனைத்தலைவருமான த.சரவணன் அவர்கள் அறிமுக உரையாற்றினார். இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலின் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அவர்கள் தலைமை உரையாற்றினார்.அவரது உரையில் நாடு முழுவதிலுமுள்ள வழக்கறிஞர்களுக்கான பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்கான வயது வரம்பு தகுதி மற்றும் சட்டக்கல்வி சேர்க்கைக்கான விதிமுறைகள் பற்றிய தலைப்பில் இந்த மாதிரி நீதிமன்ற போட்டியை நடத்தியது இன்றைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானது என்று கூறி அவ்வாறு சரியான தகுதிகள் மற்றும் விதிமுறைகள் முறையாக இருந்தால்தான் தகுதியற்ற போலி வழக்கறிஞர்கள் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றுவது தடுக்கப்படும் என்று கூறினார். மேலும் தான் பார்கவுன்சில் தலைவராக பொறுப்பேற்ற பிறகு பல நூற்றுகணக்கான போலி வழக்கறிஞர்கள் மற்றும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களை அடையாளம் கண்டு அவர்களை தகுதி நீக்கம் செய்துள்ளதை சுட்டிகாட்டினார்.இதுபோன்ற மாதிரி நீதிமன்ற போட்டிகள் வரும் காலங்களில் அனைத்து சட்ட கல்வி நிறுவனங்களிலும் நடத்தினால் மாணவர்களின் வாத திறமையும்,வழக்கு தயாரிப்பு பயிற்சியும் பெருகும் என்று கூறினார். இவ்விழாவில் சிறப்புரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சுந்தர் மோகன் அவர்கள் தனது உரையில் சட்டப்படிப்பில் அன்றைய காலகட்டத்தில் பெண்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்ததை சுட்டிக்காட்டி இன்று ஆண்களுக்கு நிகராக சில இடங்களில் ஆண்களை விட அதிகமாகவே பெண்கள் சட்டக்கல்வி படிக்கும் சூழ்நிலை தனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது என்று கூறினார்.சிறந்த வழக்கறிஞராக திகழ முந்தைய தீர்ப்புகளை ஆழமாக படிப்பதும், அதில் உள்ள கருத்துருக்களை உள்வாங்கிக்கொள்வதும் மிகவும் முக்கியமானது என்று கூறினார். மேலும் தகவல் தொழில்நுட்ப, பெருநிறுவன மற்றும் பொறியியல் பணிகளைப்போல சட்டத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தொடக்கத்திலேயே அதிக ஊதியம் கிடைக்காது என்றாலும் பொறுமையோடும் அற்பணிப்பு உணர்வோடும் தொடர்ந்து செயல்படும் வழக்கறிஞர்களுக்கு பின்வரும் காலங்களில் மிகப்பெரும் ஊதியங்களும் வருமானங்களும் நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார். இவ்விழாவில் நிறைவுரையாற்றிய நீதியரசர் எ.டி.ஜெகதீஷ் சந்திரா அவர்கள் தனது உரையை தொடங்கும் முன் இப்போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறி, ஒருவர் மிகப்பெரும் திறமைசாலியாக இல்லாது போனாலும்கூட அவர் ஒரு நல்ல மனிதனாக அற்பணிப்பு உணர்வோடு உண்மையாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு வாழ்வில் வெற்றிகளும் சாதனைகளும் தாமாகவே தேடி வந்து சேரும் என்று கூறினார்.மேலும் ஒரு வழக்கறிஞர் தாம் பணி செய்யும் இடம் உச்சநீதிமன்றமாகவோ, உயர்நீதிமன்றமாகவோ அல்லது மாவட்ட நீதிமன்றமாகவோ இருந்தால்தான் பெரும் சாதனைகளை நிகழ்த்த முடியும் என்று நினைக்காமல் கீழமை நீதிமன்றங்களில் கூட திறமையாக அற்பணிப்பு உணர்வோடு செயல்பட்டால் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தி காட்ட முடியும் என கூறினார்.மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த தேசிய மாதிரி நீதிமன்ற போட்டிகளில் முதல் பரிசை தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக சட்ட மாணவர்களான சாமிநாதன், ஆதித்தியா மற்றும் கிருஷ்ணப்ரசாத் ஆகியோர் வென்றனர்.இரண்டாம் பரிசை பெங்களூருவில் உள்ள யுனிவர்சிட்டி சட்ட கல்லூரி மாணவிகளான ஆசால் மென்சீஸ்,ஹெப்சா,மற்றும் நவோதிதா ஆகியோர் வென்றனர்.மேலும் மிகச்சிறந்த ஆய்வாளர் என்ற பரிசை சென்னை புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கார் அரசு சட்ட கல்லூரியும்,சென்னை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் கிரசென்ட் கல்லூரியும்,பெற்றன. சிறந்த வாத திறமை மாணவருக்கான பரிசை சேலம் அரசு சட்ட கல்லூரியும், சாஸ்த்ரா பல்கலைக்கழகமும், சிறந்த வாத திறமை மாணவிக்கான பரிசை பெங்களூர்,யுனிவர்சிட்டி சட்ட கல்லூரியும்,கோவை அரசு சட்டக்கல்லூரியும் பெற்றன. சிறந்த நன்னடத்தை அணிக்கான பரிசை தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக அணியும், பெங்களூர், யுனிவர்சிட்டி சட்ட கல்லூரி அணியும் பெற்றன. சிறந்த வழக்காவண தயாரிப்புக்கான பரிசை பெங்களூரு அலையன்ஸ் பல்கலைக்கழக அணியும், திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக அணியும் பெற்றன. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ குழுக்களுக்கு கேடயமும் பரிசுகளும் மாண்பமை நீதியரசர்கள் வழங்கினார்கள். இவ்விழாவில் கல்லூரியின் உதவி பேராசிரியர் .அருண் ராம்நாத் நன்றியுரையாற்றினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் போட்டியின் ஒருங்கிணைப்பாளரான கல்லூரியின் உதவி பேராசிரியை சாந்தகுமாரி மற்றும் மாதிரி நீதிமன்ற போட்டிகளுக்கான குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர். கல்லூரியின் தலைமை நிர்வாகி எ.மாணிக்கம்,கல்லூரியின் முதல்வர் பேகம் பாத்திமா, கல்லூரியின் டீன் டாக்டர். டி.என்.கீதா ஆகியோர் உடனிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow