பார்வையற்ற ஆசிரியர் சங்கம் செய்தி அறிக்கை
பார்வையற்ற ஆசிரியர் சங்கம் செய்தி அறிக்கை
கடந்த 20 ஆண்டுகளாக பார்வையற்ற ஆசிரியர் சங்கம் பார்வைத் திறன்குறைபாடு உடைய ஆசிரியர்களின் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. ஆசிரியர் ஆற்றலூட்டல் மற்றும் மாணவர் நலன் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு கருத்தரங்குகள் இணைய வழி கருத்தரங்குகள் (Webinar), மாநாடுகள் மற்றும் பயிலரங்குகளை நடத்தி வருகிறது மேலும், பார்வைத் திறன்குறைபாடு உடைய ஆசிரியர்களுக்கான ஆளுமை மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு போன்ற பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களுக்கான உரிமைகள், சலுகைகள் மற்றும் வசதிகளை பெறுவதற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
எங்கள் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு அரசு 28.01.2026 அன்று வெளியிட்ட அரசாணையில் (G.D.Ms) மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு TET தேர்வில் 50% குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், NCTE வழிகாட்டி நெறிமுறைகளின் படி, TET/STET தேர்வுகளுக்கான விதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கேற்றவாறு மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. UGC மற்றும் CHSE ஆகிய அமைப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்கு சில விதித் தளர்வுகளை வழங்கியுள்ளன. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு 40% குறைந்தபட்ச மதிப்பெண் மட்டுமே நிர்ணயித்துள்ளன.
மேலும், தமிழ்நாடு அரசு 24.10.2025 அன்று வெளியிட்ட அரசாணை எண் 300-ன் படி, சிறுபான்மையினர் பணிநிலைத் தொடர்ச்சி மற்றும் பதவி உயர்விற்காக TET தேர்வு எழுதத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பார்வைத் திறன்குறைபாடு உடையவர்களுக்கான கல்வி, பயிற்சி மற்றும் தாமதமான வேலைவாய்ப்பு ஆகியவை எங்களை வாழ்க்கையில் மிகக் கடினமான நிலைக்கு தள்ளியுள்ளது.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நலனில் அக்கறை கொண்ட அரசு என நாங்கள் நம்புகிறோம். ஆகவே கடந்த கால TET சிறப்பு TET மற்றும் எதிர்கால TET தேர்வுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 40% குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கும் வகையில் அரசாணையை திருத்தி வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பள்ளிகளிலும் பொதுப் பள்ளிகளிலும் வகுப்பு 1 முதல் 12 வரை ஆயிரக்கணக்கான பார்வையற்ற மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். சுமார் 2000 பார்வைத் திறன்குறைபாடு உடைய ஆசிரியர்கள் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும், மாணவர்களின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான பிரெயில் புத்தகங்கள் மற்றும் பிரெயில் கல்வி உபகரணங்களை தமிழ்நாடு அரசு போதிய அளவில் வழங்கவில்லை. NIVH-இலிருந்து குறைந்த அளவில் மட்டுமே புத்தகங்கள் வாங்கப்பட்டு, அவையும் சரியான நேரத்தில் மாணவர்களைச் சென்றடைவதில்லை. ஆகவே, பார்வையற்ற மாணவர்களின் கல்வி தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய புதிய பிரெயில் அச்சகம் (Braille Press) அமைக்குமாறு அரசை பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுப் பள்ளிகளில் உள்ளடக்கக் கல்வி (Inclusive Education) வழங்கி வருகிறது. ஆனால், பார்வையற்ற மாணவர்கள் இயக்கத்திறன், சூழலுக்கு ஒத்திசைவு, பார்வை மற்றும் பார்வையற்ற சூழல், பயிற்சி பெறாத ஆசிரியர்கள். கல்வி உபகரணங்களின் பற்றாக்குறை போன்ற பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அனைவருக்கும் கல்வி" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சிறப்பு தேவையுடைய குழந்தைகளின் (CWSN) தேவைகள் தற்போது பூர்த்தி செய்யப்படாத நிலை உள்ளது. ஆகவே, பள்ளிக் கல்வியில் இருந்து விலகிய மற்றும் பள்ளி சேராத பார்வையற்ற குழந்தைகளை கல்வி அமைப்பில் இணைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அரசை வலியுறுத்தும் வகையில் அனைத்து ஜனநாயக முறைகளிலும் போராட்டங்களில்ஈடுபடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாற்றுத்திறனாளி நலனைக் கருத்தில் கொண்டு, இந்த செய்தியை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் முக்கியத்துவத்துடன் வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
உ. ரஜினிகாந்த் பொதுச் செயலாளர் பார்வையற்ற ஆசிரியர் சங்கம்.
What's Your Reaction?



